புதன், 16 மார்ச், 2011

மும்பையின் மறுபக்கம்

மும்பை ஒரு மெட்ரோ நகரம் . மும்பையினுடைய கிழக்குத்திசை , மேற்குத்திசை இரண்டையும் பிரித்துக் கொண்டு நிரம்பி வழியும் ஜனத்தொகையோடு ஓடுகிற லோகல் டிரெயின், அதிகாலையிலே அந்த லோகல் டிரெயின் 80 சதவிகத ஜனத்தொகையை அனுதினமும் ஏற்றிக்கொண்டு ஓடுகிறது. பொழுது விடிந்த வண்ணம்தான் அவ்வளவு பரபரப்பாக செயல்படுகிற மும்பை நகரவாசிகள் அதாவது விடியற்காலையில் தொடங்கிய இந்த பரபரப்பு நள்ளிரவுயாகியும் முடிந்தபாடில்லை . காலம்காலமாக மும்பையின் பெருமைகளை நாம் வாய் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கிறோம் . வணிகமென்று சொன்னால் உதடுகள் மும்பையினுடைய பெயரைத்தான் முணுமுணுக்கிறது, ஆங்கிலேயர் காலத்திலிருந்து வணிகத்துறையில் ஒரு முக்கிய அங்கமாக வகித்துவந்த மும்பை இன்றும் அந்த இடத்தை விட்டுக்கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறது . மும்பையினுடைய வணிகத்தால் அந்நிய கருவூலம் செழிப்படைகிறது . வயித்துபிழைப்புக்காக, வேறு மாநிலத்திலிருந்து மும்பைக்கு வருகிற ஒவ்வொருத்தனுடைய கைகளில் கத்தைகத்தையாக நோட்டுக்கள் புழங்குகிறது , இந்த நகரத்துக்கு வந்த ஆண்டியும் அரசனாகி விடுகிறான். சௌபாட்டியில் வேர்கடலை வியாபாரியின் கைகளில் 1000 ரூபாய் நோட்டுக்கட்டுக்களிருப்பது சர்வசாதாரண விஷயமாகும் . ஆனால் நம்மைப் போன்ற சுற்றுலா பயணிகளுக்கு இந்த விஷயம் வியப்பாகயிருக்கலாம், இது மும்பைவாசிகளுக்கு உப்புச்சப்பில்லாத விஷயமாகும் . மகாலட்சுமியும் , சித்திவினாயகரும் குடியிருக்கிற மும்பையின் செல்வச் செழிப்பை இந்தியா என்றென்றும் பாடிக்கொண்டிருந்தாலும், இந்நகரத்திலும் உணவுத் தட்டுப்பாடு இருக்கிறதென்கிற செய்தி நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறதல்லவா?


மும்பையிலுள்ள சில பகுதிகளில் வாழுகிற ஏழைகள் போதிய அளவு உணவு பொருட்கள் கிடைக்காமல் மரணமடைகிறார்கள் . மும்பையில் சிவாஜிநகர் பகுதி ஏழை எளியவர்கள் வாழுகிற சுகாதாரமற்ற பகுதியாகும் . இந்தப் பகுதியில் 2010 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதத்திலிருந்து 6வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகிறார்கள் . இதற்கடுத்தது கோவிண்டி என்ற பகுதியில் அதிகமாக நடுத்தர வர்க்கத்தினர்கள் வாழுகிறார்கள் . இதே பகுதியில் ரஹேஜா கட்டுமான வல்லுனர்கள் நிறுவனம் , பெரிய பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் , இடம் பெற்று இருக்கின்றன . மும்பை லோகல் டிரெயின் வேகத்தை குறைத்துக் கொண்டு சி எஸ்டி நிலயத்தில் இருந்து சிவாஜிநகர் பகுதியை கடந்து செல்லுகிறது .

கோணிப்பைகளால் மூடப்பட்ட ஒத்தை செங்கற்ச்சுவர்கள், பிளாஸ்டிக் பைகளால் மூடிய கூரைகளேன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எண்ணற்ற குடிசைகள் இந்தப் பகுதியில் இடம் பெற்று இருக்கின்றன . சிவாஜிநகர் பகுதி முழுவதும் சின்ன சின்ன கால்வாய்களாக சாக்கடைத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது , அதன் நடுவே விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் . இரயில் சிவாஜிநகரை கடந்து செல்லும்போது அப்படியொரு துர்நாற்றம் , இந்தப்பகுதி மக்கள் அழுக்கோடு வாழுகிறார்கள் . வேறு மாநிலத்தில் இருந்து வருகிற ஏழைமக்கள் மும்பையிலுள்ள இந்தப் பகுதிக்குத்தான் முதன் முதலில் குடிபெயர்கிறார்கள். கொஞ்ச காலத்துக்கு சிவாஜிநகரில் தஞ்சமடைந்து விட்டு கைகளில் காசு கிடைத்தவுடன் வேறு இடத்துக்கு மாறிச் செல்லலாமென்கிற எண்ணத்தோடு இந்த இடத்துக்கு முதன்முதலில் வருகிறார்கள் . நாளாக நாளாக கிடைக்கிற வருமானம் கைக்கும் வாய்க்கும் பத்தாமல் குடிபெயர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் நிரந்தரமாக தங்கிவிடுகிறார்கள் . ஒரு சதுரங்கடி நிலம் லட்சரூபாய் மதிப்பைகொண்ட கொலாபாவிலும் இப்படிப்பட்ட சுகாதாரமற்ற குடிசைகள் நிறைந்த பகுதியை பார்க்க முடிகிறது . ஒரு பக்கம் அடுக்குமாடிக் கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள் , பணக்காரவர்க்கம் வாழுகிற கொலாபா பகுதியின் மற்றொரு பக்கத்தில் சுகாதாரமற்ற ஏழைமக்களின் குடிசை பகுதியும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் குடியிருக்கிற மக்களுக்கு உணவுப்பண்டங்கள் கிடைப்பதில்லை , அப்படியே கிடைத்தாலும் ஊட்டச் சத்துள்ள உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை . மாதத்துக்கு 16 குழைந்தை களிருந்து 25 குழைந்தைகள் மரணமடைகிறார்கள் , குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் சரியான உணவு கிடைக்காமல் உயிர் இழைக்கிறார்கள் .


இந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு மலிவான விலையில் ஊட்டச்சத்துள்ள உணவுப்பண்டங்கள் விநியோகம் செய்ய வேண்டுமென்று மாநில அரசு அறிக்கை கொடுத்தாலும் , அதனை நடைமுறைக்கு கொண்டு வருகிற அதிகாரிகளின் கவனக்குறைவால் அங்கு வாழும் மக்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய உணவுப்பண்டங்கள் கிடைக்காமல், அனைத்தும் விரயமாகி அழுகி விடுகிறது , ஏழைகளின் கைகளுக்கு எட்டவிடாமல் இடைத்தாரர்கள் புகுந்து உணவுப்பொருட்களை பறித்துச் செல்லுகிறார்கள் . அப்படியே விநியோகம் செய்தாலும் அந்த மக்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவுபன்டங்கள் கொடுக்கப்படுகிறது . ஊட்டச்சத்து குறைவால் நோய்வாய்பட்ட குழைந்தைகள் , அதிலிருந்து மீண்டு எழுந்து வருவதற்கு சக்தியில்லாமல், படுக்கையில் புழுவைப்போல சுருண்டுகிடந்து உயிர் விடுகிறார்கள் . குச்சிபோல கைகளும் கால்களும், வீங்கிய தொப்பைகளும் கொண்ட குழந்தைகளை பார்க்கும்போது மனம் வலிக்கிறது , எலும்பும் தோலுமாக காட்சி தரும் பெண்மணிகள் , எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடக்கூடிய நிலையிலுள்ள ஆண்கள் என்று , மும்பையின் மறுபக்கத்தினுடைய பரிதாபமான செய்தியைக் கேட்டவர்களுடைய மனம் கனக்கிறது, ஏதோவொரு நெருடல் உறுத்திக் கொண்டிருக்கிறது . அரசாங்கம் பார்த்து ஒரு நல்லவழி செய்ய வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது , முடிந்ததை செய்வதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டுமல்லவா ? இதுதான் ஒரு உண்மையான குடிமகனின் உண்மையான அக்கறை !!!